கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அதன்படி ஐ.ஜி. அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் இந்த குழுவினர் கடந்த சில நாட்களாகக் கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டது தொடர்பாக புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி தாக்கல் செய்துள்ளார். அதில், “இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு கோடி ரூபாயை த.வெ.க. தலைவர் விஜய் தரப்பிலிருந்து இழப்பீடாக வழங்க வேண்டும். அதோடு அரசு தரப்பில் இருந்து தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த ஒரு துயர சம்பவமாக இதனைக் கருத வேண்டும். எனவே உள்ளூர் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும். எனவே இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. அல்லது தற்போது பதவியில் உள்ளவரோ, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியோ, உச்சநீதிமன்றத்தின் நீதிபதியோ அடங்கிய புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தடை விதிக்க கோரி த.வெ.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.