Advertisment

அண்ணாவை நாங்கள் ஏன் கையில் எடுத்தோம்? - விஜய் சொன்ன காரணம்

4

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் த.வெ.கவும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு நடிகர் விஜய் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியதோடு, மக்கள் சந்திப்பையும் முற்றிலுமாகத் தவிர்த்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சேலத்திலிருந்து மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் அம்மாவட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

Advertisment

அந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய விஜய், “‘நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்… பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்…’ என்று எம்.ஜி.ஆர் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். நீங்களும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நமது காஞ்சித் தலைவர் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம்தான் இந்தக் காஞ்சிபுரம் மாவட்டம்.

தன்னுடைய வழிகாட்டியான அறிஞர் அண்ணாவைத்தான் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியின் கொடியில் வைத்தார். ஆனால் அறிஞர் அண்ணா தொடங்கிய அந்தக் கட்சியைப் பின்னர் கைப்பற்றியவர்கள் என்னெல்லாம் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா? மக்களே, உங்களுக்குத்தான் அது நன்றாகத் தெரியுமே! தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. எந்த வாய்க்கால் வரப்புத் தகராறு கூடக் கிடையாது.

அப்படி ஏதாவது இருந்தாலும் நாங்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் நம்மீது வன்மம் வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படியெல்லாம் இல்லை. ஆனால், உங்களையும் என்னையும் நம்மையெல்லாம் பொய் சொல்லி நம்பவைத்து, ஓட்டுப் போட வைத்து ஏமாற்றினார்களே… அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்வது போல நடிக்கிறார்களே… நாடகம் ஆடுகிறார்களே… அவர்களை நாம் கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும்?

அதனால் அவர்களைக் கேள்வி கேட்காமல் விடப்போவதே இல்லை. இதை நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சொல்வதற்குக் காரணம்: தெரிந்தோ தெரியாமலோ இந்த மாவட்டத்துக்கும் நமக்கும் தானாக ஒரு இணைப்பு ஏற்படுகிறது. ஏனென்றால், நமது முதல் களப் பயணமே பரந்தூரில் இருந்துதான் தொடங்கியது. பரந்தூருக்குச் சென்று அந்த மண்ணில் நின்று அந்த மக்களுக்காகக் கேள்வி கேட்டதும் இதே அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம்தான். இன்றைக்கு ஒரு பெரிய மன வேதனைக்குப் பிறகு இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருப்பதும் அதே அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம்தான்.

அதனால் நமக்கெல்லாம்… எல்லாமும் கொடுத்த நமது மக்களுக்காக எல்லா நல்லதையும் செய்ய வேண்டும். அதுவும் சட்டப்படி செய்ய வேண்டும், அங்கீகாரத்தோடு செய்ய வேண்டும், அதிகாரபூர்வமாக செய்ய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரே மாதிரி செய்ய வேண்டும், ஒரே எண்ணத்தோடு செய்ய வேண்டும். அந்த ஒரே லட்சியத்தோடுதான் நாம் அரசியலுக்கே வந்திருக்கிறோம். அதனால்தான் ‘மக்களிடம் செல்’ என்று சொன்ன அண்ணாவையே கையில் எடுத்தோம். அவர் சொன்னபடி மக்களை நோக்கிப் போகிறோம்” என்றார்.

Anna kanjipuram tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe