தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மூன்றாவது கட்டமாக இன்று (27-09-25) நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பா.ஜ.க என யாரையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
குறிப்பாக நாமக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், சில இடங்களில் உளறி பேசினார். அதாவது அவர் பேசியதாவது, “அதிமுக - பா.ஜ.க பொருந்தா கூட்டணி. . அதிமுக-பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நன்றாக தெரியும். ஆனால் அதே நேரம் திமுக குடும்பம் பாஜகவுடன் டீலிங் இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள். வரப்போகும் தேர்தலில் நீங்க திமுகவிற்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி.
அதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் டிஎம்கே (DMK)- டிவிகே (TVK) இடையே தான் போட்டி. அதாவது ஒன்று, மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோர்களின் குரலாக இருக்கிற டிவிகே. இன்னொன்று, கொள்கை என்ற பெயரில் கொள்ளையடித்துவிட்டு மக்களை ஏமாற்றுகிற இந்த டிஎம்கே. இந்த இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே” எனப் பேசினார். அதனை தொடர்ந்து பேசிய விஜய், “இப்படி மோசமான ஒரு ஆட்சியை கொடுக்கிறார்களே, இந்த திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா?” எனக் கேள்வியெழுப்ப கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஒத்த குரலாக ‘வேண்டாம்’ எனப் பதிலளித்தனர்.
தொடர்ந்து, ‘உண்மையான மக்களாட்சி உங்க நம்ம டிவிகே மறுபடியும் ஆட்சி அமைக்கணுமா’ எனக் கேள்வி எழுப்ப, ‘ஆமாம்’ என தொண்டர்கள் பதிலளித்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட விஜய், “சாரி, இப்ப ஆட்சி அமையணுமா எனக் கேட்டேன்” என சிரித்துக் கொண்டே பேசினார்.