Vijay Prabhakaran's advice to Tvk Leader Vijay at the DMDK conference
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ நேற்று (09.01.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த மாநாட்டு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்த அறிவிப்பை பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் மகனும் இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பேசியதாவது, “ஒவ்வொரு தேர்தலில் தேமுதிக பேரம் பேசுகிறது என்று சொல்கிறார்கள். என்ன பேரம் பேசியது? உங்கள் ஓபன் சேலஞ்ச் விடுகிறேன். 2005க்கு முன்னாடி விஜயகாந்துக்கு என்ன சொத்து இருந்தது? இன்றைக்கு அவரது குடும்பத்துக்கு என்ன சொத்து இருக்கிறது? இலவசமாக அவர் கல்லூரி கட்டி கொடுத்தார். இன்றைக்கு கல்லூரி நம்மிடம் இருக்கிறதா? கேப்டன் டிவி ஆரம்பித்தோம். அந்த டிவி இன்றைக்கு இருக்கிறதா? 2012இல் சண்முக பாண்டியன் படம் நடிக்க வந்தார். 12 வருடமாக நான்கு படம் தான் பண்ணிருக்கிறார். ரெட் ஜெயண்ட் மாதிரி நம்மிடம் புரொடக்ஷன் கம்பேனி இருக்கிறதா? என்ன இருக்கு? நீங்க இருக்கீங்க. எனக்கு எதுக்கும் பயம் இல்லை. 2016இல் இருந்து 2025 வரைக்கும் ஒரே போர்ட் அண்ட் வர் தான். ஒரே ஒரு இனோவா கார் தான். இன்றைக்கு எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ வீடு வைத்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் கஷ்டப்பட்டு ஒரு வீடு கட்டி அந்த வீட்டுக்குள்ளே குடியேற முடிந்ததா? அதே தெருவில் தான் நாங்கள் இருக்கிறோம். இதற்காக நாங்கள் ஒரு துளியாவது கஷ்டப்பட்டிருப்போமா? விஜயகாந்தின் ரத்தம் இன்னும் எங்களுடன் ஓடிட்டு இருக்கிறது. கூட்டணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஏனென்றால் நம் கூட இருந்த துரோகத்தை பார்த்துவிட்டோம். இனி கூட இருக்கும் விசுவாசத்தை நாம் எல்லோரும் பார்ப்போம். இரண்டு பெரிய கட்சிக்கும் தேமுதிக தேவைப்படுகிறது. தேமுதிக எங்கே சேர்கிறதோ அது தான் மெகா கூட்டணி.
ஜன நாயகன் படம் ரிலீஸ் பிரச்சனை போய் கொண்டிருக்கிறது. விஜய் அண்ணனுக்கு அவரோடு தம்பியாக, உங்கள் அண்ணனோட மகனாக ஒரு சின்ன அட்வைஸ் கொடுக்கிறேன். ஏனென்றால் நான் அரசியல் மூத்தவர் என்று நீங்களே என்னிடம் சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சி அவர்களது கூட்டணியில் பேரம் பேசுவதற்காக உங்கள் படத்தை சப்போர்ட் பண்றாங்க. அவர்களை நம்பாதீர்கள். தூண்டில் போடுகிற மாதிரி மீன் மாட்டுகிற மாதிரி மாட்டிறாதீங்க. விருதுநகர் தொகுதியில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்களை நம்பாதீங்க. சினிமா துறையோடு சேருங்கள். உங்கள் கூட கூட்டணிக்கு வருகிற மாதிரி அங்கே பேரத்தை பேசி அங்கே தான் இருப்பார்கள். அதனால் என்னுடைய சின்ன அட்வைஸ். இது புடிச்சிருந்தா ஏத்துக்கோங்க, பிடிக்காமல் இருந்தாலும் ஏத்துக்கோங்க. நல்லதுக்கு சொல்கிறேன்” என்று பேசினார்.
Follow Us