கோப்புப்படம்
கரூரில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்திக்கவே இல்லை என தொடர் விமர்சனம் எழுந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து தவெக ஆறுதல் கூறாததை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை அடுத்து அக். 3, 4ம் தேதிகளில் உயிரிழந்தவர்களை குடும்பத்தினரை தவெக நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். அக். 6, 7ம் தேதிகளில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து வீடியோ கால் மூலம் விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வைத்தார்.
கரூர் வந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்திக்க இயலாத நிலையில் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். அதன்படி, இன்று (27-10-25) சென்னை மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் வரவழைத்து விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்காக 5 பேருந்துகள் வரை தயார் செய்யப்பட்டது. கரூரில் உள்ள 27 குடும்பங்களை சேர்ந்தவர்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்னை செல்ல விருப்பம் தெரிவித்தனர். மேலும் சில குடும்பத்தினர் உயிரிழந்தவர்களுக்கான 30ஆம் நாள் வழிபாடு செய்கின்றனர். இதனால் அவரவர் வசதிக்கேற்ப வருவதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், நேற்று (26-10-25) பாதிக்கப்பட்ட குடும்பங்களை பேருந்து மூலம் சென்னை மகாபலிபுரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று (27-10-25) காலை தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Follow Us