பெருநகர சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் அமர்ந்து ஐந்து ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. மாறாக, அதிமுகவைப் போலவே செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், போராட்டத்தைக் கைவிடுமாறு அரசு மற்றும் காவல்துறை தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், போராட்டக்காரர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.