வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வேலூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், “உள்ளம் தேடி இல்லம் நாடி பயணம் வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. கடலூர் மாநாட்டில் தான் கூட்டணி குறித்து பேசுவோம். அதுவரை எதுவும் சொல்லப்போவதில்லை,” என்றார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது? எனக் கேட்டதற்கு, “சட்டம் ஒழுங்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. போதைப் பொருள் எல்லா இடங்களிலும் சரளமாகக் கிடைக்கிறது. இதுதான் சீரழிவிற்குக் காரணம். சட்டத்துறையைத் தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் இதற்குத் தனிக் கவனம் செலுத்தி சீர் செய்ய வேண்டும்,” என்றார்.

ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம் இயற்றுவது குறித்து கேட்டதற்கு, “ஆணவக் கொலைகளைத் தடுக்க வேண்டும் என்பதை தேமுதிக வரவேற்கிறது. இந்த நாட்டில் பாரதியார், பெரியார் ‘ஜாதி இல்லைடி பாப்பா’ என்று பேசியவர்கள். ஆனாலும், ஜாதி ஒழியவில்லை. எல்லா இடங்களிலும் ஜாதி உள்ளது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி தேமுதிக,” என்றார்.

கேப்டன் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு மாற்றியது. இதில் தேமுதிகவின் தலையீடு அல்லது அழுத்தம் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டதற்கு, “தமிழக வெற்றிக் கழக மாநாடு தேதி மாற்றம் குறித்து காவல்துறையிடமும், விஜய்யிடமும் தான் கேட்க வேண்டும். எங்கள் தரப்பில் இருந்து எந்த அழுத்தமோ, கோரிக்கையோ வைக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களாகிய நீங்களும் எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். எப்போதும் கூட்டணி குறித்து மட்டும் கேட்காதீர்கள்; மக்கள் பிரச்சினைகள் குறித்து கேளுங்கள்,” என்றார்.

Advertisment

மேலும், “எக்காரணத்தைக் கொண்டும் கேப்டனின் படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்பதை இங்கு அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். எந்தக் கட்சியும் கேப்டனின் புகைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வரும்போது வேண்டுமானால் பயன்படுத்தலாம். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை; பொதுவாகச் சொல்கிறேன். எங்களுக்கு கட்சி உள்ளது; எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கேப்டனின் படத்தைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ, காட்சிகளிலோ பயன்படுத்தக் கூடாது. ஆனால், இது சினிமாவிற்குப் பொருந்தாது. சினிமாவில் கேப்டனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கேப்டன் எங்கள் குடும்பச் சொத்து அல்ல; சினிமாத் துறையின், மக்களின் சொத்து என்பதால், திரைத்துறைக்கு இது பொருந்தாது. அரசியல் கட்சி என்று வரும்போது குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக இதைத் தெரிவித்துள்ளேன்,” என்றார்.

இன்று குடியாத்தத்தில் ‘கேப்டனின் ரத யாத்திரை’ மாலை 5 மணிக்குத் தொடங்கப்படுகிறது. கேப்டன் வேலூர் மாவட்டத்தின் மருமகன். மாமனார், மாமியார் ஊரிலிருந்து தான் ரத யாத்திரையைத் தொடங்க வேண்டும் என கேப்டன் நினைத்திருக்கிறார் போல; அதனாலேயே ‘மக்களைத் தேடி மக்கள் தலைவர்’ என்று ரத யாத்திரை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.