தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் இன்று (23.02..2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர் சட்டமன்றத் தேர்தலையொட்டி சில வாக்குறுதிகளை கொடுத்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது, “நாம் காஞ்சிபுரத்தில் பேசும்போது நம்முடைய தொலைநோக்கு என்னவென்று சொன்னோம். அதுனுடைய நீட்சியாக சில விஷயங்கள் சொல்ல வேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் பாதுகாப்பு நம் ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருக்கும். சட்டம் ஒழுங்கு ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கும். அரசு பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் முதல் தரமாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு லட்சங்களை கொட்டி தனி கோச்சிங் செண்டரில் போய் படிக்க அவசியமே இருக்காது. ஏனென்றால் அரசு பள்ளி, கல்லூரிகளிலே போட்டி தேர்வுகளை எளிதாக சந்திக்கிற வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். உயர்நிலை பள்ளி பாட திட்டங்களிலேயே அடிப்படை அரசியல் சாசன சட்டம்சேர்க்கப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடு மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தேர்வுகள் அற்ற செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும். இந்தியா முழுக்க உள்ள ஒன்றிய அரசு சார்ந்த கல்வி நிலையங்கள் மற்றும் அதன் சேர்க்கை குறித்து புரிதலும் தெளிவும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும், பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் தரமான கதவுகள் பொருத்தப்பட்ட கழிவறைகள் அமைப்பது உறுதி செய்யப்படும். போதை பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும். பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ டாக்ஸி மற்றும் லாரி டிரைவர்களுக்கென அவர்களின் நலன்களுக்காகவும், குடும்ப நலன்களுக்காகவும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும். தென்தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் காலத்தின்தேவைக்கேற்ப உருவாக்கப்படும்.
அறிவாலயம் பக்கத்தில் யார் நடந்து போனாலும், அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்கினாலும் நம் ஸ்டாலின் சார் கூட்டணியில் சேர்த்திருக்கிறார். கொள்ளை அடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கை கொடுத்து கூட்டணியில் சேர்த்திருக்கிறர். அதற்கு பெயர் கல்லாப்பெட்டி கூட்டணி என்று வைத்திருக்கிறேன். இந்த கல்லாப்பெட்டி கூட்டணியை ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்திருக்கிறார். இந்த அரத பழைய கூட்டணி கணக்குகளோ, கொள்ளையடிச்சு பணத்தையோ வைத்து எங்கள் மக்களை ஏமாற்றி எல்லாம் ஜெயிக்க முடியாது என்று அவருக்கு நான் சொல்கிறேன். ஏனென்றால் இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/vijaymani-2026-02-23-17-41-12.jpg)