தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (27-09-25) மூன்றாவது கட்டமாக நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Advertisment

விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Advertisment

குறிப்பாக பரப்புரையில் பங்கேற்ற 29 பேர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதால் கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த நிலையில், கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விஜய், இந்த துயர சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் எந்தவித கருத்து தெரிவிக்காமல் சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செல்ல கரூரில் இருந்து இரண்டு இடத்தில் கார் மாறி திருச்சி விமான நிலைய வளாகத்திற்கு விஜய் வந்தார். அப்போது அங்கு சூழ்ந்திருந்த செய்தியாளர்கள் விஜய்யை சுற்றி நின்று, ‘சார், சார், சார்’ என கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக கருத்துக் கேட்க முயன்றனர். ஆனால் விஜய், எந்தவித பதிலளிக்காமல் விமான நிலையத்திற்குள் விமானம் ஏறச் சென்றார். திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணியளவில் சென்னை வந்தடையவுள்ளார். 

Advertisment