தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான இன்று(20.09.2025), நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisment

முன்னதாக, கடந்த வாரம் திருச்சியில் அவர் பரப்புரை மேற்கொண்டபோது, அவரைப் பின்தொடர்ந்து அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் அதிக அளவில் வந்தனர். இதனால், அப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தடுக்கும் வகையில், த.வெ.க. தலைமை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதற்காக, தனது வீட்டிலிருந்து இன்று புறப்பட்ட நடிகர் விஜய், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், நாகப்பட்டினம் அண்ணா சிலை சந்திப்பில் நாளை நண்பகல் 12:30 மணிக்கு விஜய் தனது பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார். அதனை முடித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.