தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் பாரப்பத்தி பகுதியில் நடைபெற்றது. மாநாட்டில் பேசியிருந்த நடிகர் விஜய் அதிமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தார். அதில் 'எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி தற்போது எந்த நிலையில் இருக்கிறது, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பிய விஜய், 'அதிமுக தொண்டர்கள் என்ன செய்வது என்று தவிக்கிறார்கள். பாஜக அடிமை கூட்டணிக்கு நாங்கள் ஏன் வரவேண்டும்?' எனவும் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் விஜய் அதிமுக மீது வைத்த விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார் என்பதுதான் மதுரை மாநாட்டில் அவரது நடவடிக்கையாக இருந்தது. அவர் பாட்டுக்கு வந்தாரு அவர் பாட்டுக்கு துண்டை தூக்கி தோளில் போட்டார். துண்டை தூக்கி கீழே போட்டார். கூட்டத்தை முடித்து விட்டு போய் விட்டார்கள். ஒரு வலுவான அரசியல் இயக்கத்தை நடத்தக்கூடிய ஆற்றல் விஜய்க்கு இருப்பது போல தெரியவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினசரி ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். தொகுதி தோறும் தினசரி ஒரு மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத ஒரு தலைவரை போல விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.

அதிமுக 54 ஆண்டுகள் களத்தில் இருந்து. 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுகவை குறைத்து மதிப்பிடுவது மூலம் விஜய்யினுடைய வீழ்ச்சியில் முதல் படிக்கட்டு ஆரம்பித்துவிட்டது. விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்பு இல்லை'' என்றார்.