கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருடன் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் பாதிக்கப்பட்டோர் வீட்டுக்கு நேரில் போகாமல் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ''குற்றம் புரியவில்லை என்றால் தைரியமாக அவருடைய தோழர்களோடு துயரச் சம்பவம் ஏற்பட்ட வீடுகளுக்கு போயிருக்க முடியும். தன்நெஞ்சே தன்னைச் சுடுகின்ற காரணத்தால் அவர் வெளியே வர பயம். அதனால் வீடியோ காலில் பேசுகிறார்'' என்றார்.
தொடர்ந்து கச்சத்தீவு குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது குறித்த கேள்விக்கு, ''நயினார் நாகேந்திரனுக்கு கச்சத்தீவு பற்றி ஒன்றும் தெரியாது. யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை பேசியிருக்கிறார். அவர் நல்ல மனுஷன் அவருக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது'' என்றார்.