Vijay indirectly criticized Senthil Balaji by singing
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மூன்றாவது கட்டமாக இன்று (27-09-25) நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பா.ஜ.க என யாரையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பிரச்சாரம் செய்யும் இடமான வேலுச்சாமிபுரத்திலும், தொண்டர்கள் உற்சாகம் குறையாமல் மாலை முதல் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு விஜய், பரப்புரைத் திடலுக்கு வந்தார். அப்போது, விஜய், விஜய், தவெக, தவெக என கூட்டத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர், வாகனத்தின் மேல் ஏறி நின்று தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றியதாவது, “கரூரில் இருக்கும் முக்கியமான பிரச்சனையை நாம் பேசினோம். கரூரில் இருக்கும் இன்னொரு பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் ஒருத்தரைப் பற்றி நாம் பேசாமல் போனால் நல்லாவா இருக்கும். கரூர் வரைக்கும் வந்துட்டு அவரை பற்றி பேசாமல் போனால் நல்லா இருக்குமா?. எதற்கு சுற்றி வளைத்துவிட்டு, நேரடியாக விஷயத்துக்கே வருவோம். கரூர் மாவட்டத்தில் மந்திரி மந்திரின்னு ஒருத்தர் இருந்தார்ல, இப்போது அவர் மந்திரி இல்லை. ஆனால், அவர் மந்திரி மாதிரி. அவர் யாரென்று நான் சொல்லி தான் தெரியனுமா என்ன? க்ளூ ஒன்று கொடுக்கலாமா?” என்று பேசிக் கொண்டே “பாட்டிலுக்கு பத்து ரூபாய், பாட்டிலுக்கு பத்து ரூபாய், பாட்டிலுக்கு பத்து ரூபாய்....” எனப் பாடினார்.