Vijay in CBI custody - tight security in Delhi Photograph: (TVK)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பல்வேறு கோணங்களில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் விசாரணைக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்று காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையில் விஜய்யிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை விசாரணை இன்று முடியாமல் நாளையும் நீடித்தால் நாளை மறுநாள் விஜய் சென்னை திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்க்கு உரியப் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு கட்சி சார்பில் ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் மனு அளிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு சிபிஐ அலுவலகத்திற்கு இவ்வளவு பாதுகாப்புகள் வழங்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிற அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் என அனைத்து தரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகம் மட்டுமன்று அதனைச் சுற்றியுள்ள அரசு கட்டிடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் துயரம் நடந்து 107 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று சிபிஐ வசம் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us