கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, தவெக நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,  சிடிஆர்.நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரிடம் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி விசாரணை நடத்தினர்.

Advertisment

தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை ஏற்று, கடந்த 12ஆம் தேதி டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக சுமார் 100 கேள்விகள் வரை எழுப்பியதாகக் கூறப்பட்டது. அடுத்த நாள் ஜனவரி 13ஆம் தேதியும் தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசாரணையை ஒத்திவைக்குமாறு விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்து இன்று (19-01-26) ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பினர்.

Advertisment

இந்தநிலையில் விஜய், இரண்டாம் நாளாக இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது, கரூர் பரப்புரைக் கூட்டத்திற்கு சுமார் 7 மணி நேரம் தாமதமாக வர காரணம் என்ன? நீங்கள் குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும்போது கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? வாகனத்தின் மேல் இருந்த நீங்கள் நிலைமை மோசமானதை அறியவில்லையா? காவல்துறை பொது அறிவிப்புகளை தொடர்ந்து செய்தது என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரி கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையின் மூலம், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இன்று  சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம்கட்ட விசாரணை  நிறைவு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளையும் விஜய்யிடம் விசாரணையை தொடர்வது குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Advertisment