கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருடன் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த வார இறுதிக்குள் நடிகர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்காக இமெயில் மூலமாக காவல்துறை தலைமையிடம் தமிழக வெற்றிக் கழகம் அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் செல்ல இருக்கும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி தவெகவினர் இமெயிலில் கடிதம் அளித்துள்ளனர். அதேபோல் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து பாதுகாப்பு கோர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.