கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

வெளியான தகவலின் படி வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை அல்லது இரு தினங்களுக்குள்ளாக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்னையில் இருக்கக்கூடிய டிஜிபி அலுவலகத்தில் தவெகவினர் கடிதம் கொடுத்திருந்தனர். கரூர் காவல்துறை நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினால் அதன்படி விஜய் கரூர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. கரூரில் உள்ள தனியார் கல்லூரி அல்லது மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கரூர் காவல்துறையிடம் அந்த இடமானது முழுமையாக ஒப்படைக்கப்பட இருக்கிறது. விஜய் சென்று வரக்கூடிய பாதை; எங்கிருந்து அவர் வருகிறார், உடன் யார் யார் வருகிறார்கள், இந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள், வாகனங்கள் எத்தனை வரும் போன்ற தகவல்களை வழங்க வேண்டும் என விஜய் தரப்பிடம் கரூர் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

41 குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை  விஜய் வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்துகொள்வர் என்றும் பொதுமக்களுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தவெக  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment