தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதன்படி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisment

இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்.ஜி.ஆர் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. அறிஞர் அண்ணா காலத்தில் அரசியலுக்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் 1967இல் திமுக எம்.எல்.ஏவானார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவில் இணைந்து தீவிர அரசியல் களத்தில் பணியாற்றிய இவர், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதாவுக்கும் அதன் பின்னர் விஜயகாந்தின் தேமுதிகவில் இணைந்து பணியாற்றி பண்ருட்டி தொகுதியில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்தார்.

அதன் பின்னர், கடைசியாக ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் முக்கிய ஆலோசகராக அவர் இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி விஜய்யின் தவெகவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரனின் எம்.ஜி.ஆர் அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் எம்.ஜி.ஆர் அதிமுகவின் தொடக்க விழா இன்று (23-02-26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னிலையில் எம்.ஜி.ஆர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார், விஜய்யை ஆதரித்து பேசினார்.

Advertisment

panurt

அப்போது அவர் பேசியதாவது, “மூன்று எழுத்து கட்சி தான் ஆட்சிக்கு வரும் என்று நான் சொன்னேன். இன்னைக்கும் அதே தான் சொல்கிறேன். 1972இல் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார். 2026இல் விஜய் அண்ணா ஆட்சிக்கு வரப்போகிறார். வருகின்ற தேர்தலில் விஜய் அண்ணா நிச்சயமாக ஜெயிப்பார். ஊழல் இல்லாத ஆட்சி என்று அவர் சொன்னதற்காக தான் நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஊழல் இல்லாத ஆட்சி என்று சொல்வதற்கு ஆள் இல்லையே, இப்போது வந்துவிட்டார்ல, அவரை ஆதரித்து தானே ஆக வேண்டும். பல பேர் பல இயக்கத்தில் இருந்தாலும் கூட ஊழல் இல்லாத ஆட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம், இதில் என்ன தப்பு இருக்கு” என்று கூறினார்.