தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரியாக மதியம் 12 மணிக்கு தொடங்க வேண்டிய பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கிய நேரத்தைத் தாண்டி பல மணி நேரம் கழித்து விஜய் வந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. மறுபுறம், தாங்கள் கேட்ட இடங்களை வழங்காமல் குறுகிய இடத்தை வழங்கியதே இதற்குக் காரணம் என தவெகவினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டும் முதலமைச்சர் ஸ்டாலின், இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில், இந்தப் பிரச்சாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இத்தகைய சூழலில், தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களில் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளன. விஜய் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காமல் இருப்பது, பிரச்சாரத்திற்குத் தாமதமாக வந்தது மற்றும் தன் கண்முன்னே தொண்டர்கள் சரியும்போது கண்டுகொள்ளாமல் இருந்தது குறித்து பொதுமக்களும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த இரு நாட்களாக சமூக ஊடகங்களில் ஊடுருவிய விஜய் ரசிகர்கள், தங்களுடைய தலைவரை விமர்சிப்பவர்களை ஆபாச வார்த்தைகளால் மிகவும் கேவலமாகத் திட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் செய்த கருத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, கரூர் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில், நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விஜய்யைக் கைது செய்ய வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு, நடிகை ஓவியாவே அந்தப் பதிவை நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஓவியாவை விடாத விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாகவும், நாகரிகமற்ற வார்த்தைகளைக் கொண்டு, மிகவும் கொச்சையாக ஓவியாவை விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, விஜய்யைக் கைது செய்யச் சொல்லி அவர் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்கச் சொல்லியும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆபாசக் கருத்துகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ஓவியா, அவற்றை எல்லாம் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகப் பதிவிட்டுள்ளார்.
இப்படியான நிலையில், அவரது இந்தப் பதிவுக்கும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து மோசமாகக் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், ஓவியாவுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.