Vijay election campaign and criticizes minister in Karur
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மூன்றாவது கட்டமாக இன்று (27-09-25) நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுக, அதிமுக, பா.ஜ.க என யாரையும் விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பிரச்சாரம் செய்யும் இடமான வேலுச்சாமிபுரத்திலும், தொண்டர்கள் உற்சாகம் குறையாமல் மாலை முதல் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு விஜய், பரப்புரைத் திடலுக்கு வந்தார். அப்போது, விஜய், விஜய், தவெக, தவெக என கூட்டத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர், வாகனத்தின் மேல் ஏறி நின்று தொண்டர்கள் மத்தியில் விஜய் உரையாற்றியதாவது, “காவல்துறைக்கு நன்றி. அவர்கள் இல்லையென்றால், நான் இங்கு வந்திருக்கவே முடியாது. அமராவதி ஆற்றங்கரையில் ஒரு ஊர் தான் கரூர். அதுமட்டுமல்லாமல், டெஸ்டைல் மார்க்கெட் இங்கு ஃபேமஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். இது மாதிரி கரூரை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வது நிறைய விஷயம் இருக்கிறது. அதில் எந்த மாற்றக்கருத்தும் கிடையாது. ஆனால், சமீப காலமாக இந்தியாவிலேயே கரூர் என்று சொன்னாலே ஒரே ஒரு பெயர் தான் ஃபேமஸாக ஜொலிக்கிறது. அதற்கு யார் காரணம்?. யார் காரணம் என்பது உங்களுக்கே தெரியுமே. சரி அதைப் பற்றி பிறகு பேசுவோம். இப்போது கரூர் மாவட்டத்திற்கு அது செய்வோம், இது செய்வோம் என வாக்குறுதி கொடுத்தார்களே, அதைப் பற்றி இப்போது பார்த்துவிடுவோம்.
பேரீச்சை வளர்க்க சிறப்பு திட்டம் செயலபடுத்தப்படும், இத்திட்டத்தின்படி, பேரீச்சை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும், வாக்குறுதி நம்பர் 81. பேரீச்சை மரத்தை விடுங்க, குறைந்தபட்சம் பேரீட்சை விதையாவது கண்ணில் காட்டினார்களா?. துபாய் குறுக்கு சந்து கதை தான். கரூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி நம்பர் 448. ஆட்சியே முடிய போகிறது. நான்கரை ஆண்டு முடிந்துவிட்டது. இப்போது போய் ஒன்றிய அமைச்சரிடம் விமான நிலையம் கட்ட வேண்டும் அமைச்சர் கோரிக்கை வைக்கிறார். ஐயா அமைச்சரே, இது தான் உங்க டக்கா?. கரூரில் விமான நிலையம் வந்தால், ஜவுளி தொழில் வளர்ச்சியடையும். ஆனால் பரந்தூர் மாதிரி மக்கள் பாதிக்காத வகையில் விமான நிலையம் கட்டினால் ரொம்ப நல்லாருக்கும்.
மணல் கொள்ளை தான் கரூரின் தீராத தலைவலி. மணல் கொள்ளை வரண்ட மாவட்டமாக மாற்றியது மட்டுமல்லாமல் சட்டவிரோத கல்குவாரிகள் கரூரின் கணிமவளத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் சி.எம் சார்? 11 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டால் 11:05க்கு மணல் கொள்ளை அடிக்கலாம் என்று வெளிப்படையாக சொன்னவர்கள் தானே உங்கள் ஆளுங்க.. 2026 மணல் கொள்ளை அடிக்கும் உங்ககிட்ட இருந்து அதில் வருகிற பணத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களை விலைக்கு வாங்கிடலாம் என்ற கனவு காண்கிறவர்களிடம் இருந்து நம்ம காவேரி தாய்க்கும், கரூருக்கும் விடுதலை வேண்டுமா? வேண்டாமா?. கிடைக்கும் கவலைப்படாதீங்க. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி, இங்கு இருக்கிற பஞ்சப்பட்டி ஏரி. அதனுடைய பரப்பளவு 1000 ஏக்கருக்கும் மேல். அந்த ஏரி நல்லா இருந்தா விவசாயம் செழிப்பாக இருக்கும், விவசாயம் செழிப்பாக இருந்தால் மொத்தமாக பல லட்சம் குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கும். ஆனால், பல வருடமாக அதை சீரைக்காமல், அதற்கு தண்ணீர் வருகிற வழிகளை சரி செய்யாமல் போட்டு வைத்திருக்கிறார்கள், இந்த ஆட்சி செய்றவங்க. நம்ம ஆட்சி, அதாவது உங்க ஆட்சி வரும். அப்போது பஞ்சப்பட்டி ஏரிக்கு உயிர் வரும். உங்க முகத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் திரும்ப வரும். ஜவுளித் தொழில் கரூர் நகரை வளர்த்தெடுக்கிறது. இருந்தாலும், மக்கள் பாதிக்காத வண்ணம் ஜவுளித் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க அறிவியல் பூர்வமான நடவடிக்கை எந்த அரசும் எடுக்கவே இல்லையே என்ற கவலை மக்களிடம் இருக்கிறது. இதை தீர்க்கக் கூடிய பிரச்சனை எல்லாம், அலசி ஆராய்ந்து உண்மையாகவே நாம் அவற்றை முன்னெடுப்போம்” எனப் பேசினார்.