Vijay criticizes DMK and AIADMK in a sarcastic manner
தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று (25-01-26) சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, “மக்களுக்கு என் மேல் மட்டும் நம்பிக்கை இருந்தால் போதாது. என்னுடன் பயணம் என்னுடைய தோழர்களிடம் இருந்தும் அந்த நம்பிக்கை வர வேண்டும். அந்த நம்பிக்கை இல்லை என்று நான் சொல்ல வரவில்லை, நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அது தொடர்ந்து இருக்கிற மாதிரி நீங்கள் எல்லாம் நடந்துகொள்ள வேண்டும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். யாருக்காகவும் எதற்காகவும் நமது அரசியலை சமரசம் செய்யவே கூடாது. தயவு செய்து எல்லோரும் கொஞ்சம் ஒற்றுமையாக இருந்து உழைத்து வெற்றி பெற வேண்டும். நமக்காக மக்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பார்கள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அப்படி ஜெயிக்கறதுக்காக நாம் என்ன செய்ய போகிறோம். மக்களிடம் செல் என்று அறிஞர் அண்ணா சொன்னதை ரொம்ப ஆழமாக எடுத்துகொள்வது மட்டுமல்லாமல் நம்முடைய அரசியலில் அதை செயல்படுத்த வேண்டும். அது தான் முக்கியம். ஏனென்றால், இப்போது அரசியலில் இருப்பவர்கள் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணாவை மறந்து சுயநலமாக மாறி பல வருஷம் ஆகிவிட்டது. அண்ணாவின் பெயரில் இருக்கிற கட்சியும் அவரை மறந்து பல வருஷம் ஆகிவிட்டது. ஆனால் நாம் அவரை மறந்துவிடக்கூடாது. மக்கள் கிட்ட போக வேண்டும், மக்களோடு மக்களாவே இருக்க வேண்டும்.
ஆண்ட கட்சியாக இருக்கட்டும், இப்போது ஆளுகிற கட்சியாக இருக்கட்டும் பூத் என்றால் கள்ள ஓட்டு போடுகிற ஒரு இடம். ஆனால் நம்ம டிவிகேவுக்கு அது ஜனநாயகக் கூடம். அங்கு ஜனநாயகம் திருடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இந்த விஜய் இருக்கிறான். விஜய் கூட நிப்பான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அவர்களை பாதுகாப்பாக பூத்துக்கு அழைத்து வந்து விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைக்க வேண்டும். ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, கிளை என்று இங்கு வந்திருக்கிற எல்லோ நிர்வாகிகளும் நம் கட்சியினுடைய ஆணிவேர். நீங்கள் எல்லோரும் சுதந்திரமாக செயல்பட வேண்டும், சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். நடக்க போவது வெறும் எலெக்ஷன் கிடையாது, இது ஒரு ஜனநாயகப் போர். இந்த ஜனநாயகப் போரில் தலைமை தாங்கப்போகும் கமாண்டர்ஸ் நீங்கள் தான். இந்த தீய சக்தியின் தில்லுமுல்லு எல்லாம் நல்லா தெரியும். முழித்துக் கொண்டிருக்கும் போது முழியை தோண்டி எடுத்துட்டு போகிற கூட்டன். அதனால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு மூன்று மாதங்கள் கூட இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய களப்பணியில் தான் நம்முடைய வெற்றியே இருக்கிறது.
உங்களுக்கு இந்த விஜய் பிடிக்கும் என்பது உண்மை என்றால், அதை உழைப்பில் காட்டுங்கள். அதன் பின்னர், நாங்கள் அறிவிக்க போகிற வேட்பாளர்களுக்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். நம்முடைய இந்த டிவிகே படை, நட்பு சக்தி இருந்தாலும் இல்லையென்றாலும் தனியாகவே நின்று ஜெயிக்கிற அளவுக்கு மிகப்பெரிய படை. இந்த கூட்டத்துக்கு வரவில்லை என்றாலும், குயிலிகள் நிறைந்த பெண்கள் படையும் நம்முடன் இருக்கிறார்கள். அந்த பெண்கள் படையை பார்த்து தான் அரசியல் அரங்கமே அதிர்ந்து போய் கிடக்கிறது. வரப்போகிற தேர்தல், இதுவரைக்கும் தமிழ்நாடு பார்த்திராத வித்தியாசமான தேர்தல். வரப்போகிற தேர்தலை கணிக்கவே முடியவில்லை என்ற குரல் கேட்கிறது. ஆனால், மக்கள் ஏற்கெனவே கணித்துவிட்டார்கள். அதனால் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்த தீய சக்தியிடம் இருந்தும், ஊழல்வாத அடிமை சக்தியிடம் இருந்தும் தமிழ்நாட்டை மீட்டுவிட்டோம் என்று உறுதியாக அறிவிப்போம். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது” என்று பேசினார்.
Follow Us