Vijay criticized for telling a short story
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (08-03-26) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-26) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார். அந்த வகையில் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியும், சமூக செயற்பாட்டுக் குழுவைத் தோற்றுவித்தவருமான கிரேஸ் பானு, பைக்கர் மாயா, இஸ்ரோ பெண் விஞ்ஞானி, கால்பந்து பயிற்சியாளர் தமிம் முனிஷா உள்ளிட்ட பலரையும் விஜய் கெளரவித்தார்.
இந்த விழாவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “பெண்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்று கூறி வழக்கம் போல் குட்டி கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் தெரிவித்ததாவது, “ஒரு ஊரில் ஒரு பெரிய கோயில் யானை இருந்தது. ரொம்ப உஷாரான அந்த யானையை யாரும் ஏமாற்றவே முடியாதாம். அப்படிப்பட்ட அந்த யானையை அந்த ஊரில் இருந்த ஒரு ஜகஜால கில்லாடி ஒருத்தர் வந்து ரொம்ப ஈசியா ஏமாத்திட்டாராம். தேங்காய் மூடிக்குள்ள இருந்த தேங்காய்க்கு பதிலா சுண்ணாம்பை வச்சு அது ஒரு நிஜ தேங்காய் மாதிரி ரெடி பண்ணி அதை யானையிடம் நீட்டி இருக்கிறார். யானையும் அந்த தும்பிக்கையை வச்சு அதை வாயில் போட்டு சாப்பிட்டுவிட்டது. பக்கத்தில் இருந்த ஒரு நண்பர் கேட்டாராம், அது ரொம்ப உஷாரான அந்த யானையை எப்படி ஏமாத்துன? என பக்கத்தில் இருந்த ஒரு நண்பர் கேட்டாராம்,
அதற்கு அவர், அதெல்லாம் ஒரு தொழில் ரகசியம் அய்யாச்சாமி, அதற்கெல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணும் அதெல்லாம் உனக்கு தெரியாது அப்படின்னு சொல்லி கடந்து போயிட்டார். திருப்பி ரொம்ப நாள் கழித்து அந்த மிஸ்டர் ஜெகஜால கில்லாடியும் அந்த நண்பரும் மீட் பண்ணிருக்காங்க. அப்போ அந்த யானை விஷயம் வந்திருக்கிறது. பாவம் அந்த யானை உஷாரான யானைதான், எப்படி ஏமாந்துச்சுன்னு தெரியல. எனக்கு என்னமோ அன்னைக்கு ஒரே ஒரு தடவை தெரியாம ஏமாந்திருக்குமோ அப்படின்னு நான் நினைக்கிறேன் அப்படின்னு அந்த பிரண்ட் சொன்னான். உடனே ஓஹோ அப்ப உனக்கு என்னோடு டேலன்ட் மேல உனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லி இரண்டாவது முறையாக ஒரு வாழைப்பழத்தில் உள்ள அந்த பழத்தை வெளியில் போட்டுவிட்டு உள்ளே ஒரு பஞ்சை வைத்து அதே மாதிரி நிஜ வாழைப்பழம் மாதிரி ரெடி பண்ணி அந்த யானையிடம் போய் தெனாவட்டாக நீட்டிருக்கிறார் அந்த ஜகஜால கில்லாடி.
அந்த யானையும் தும்பிக்கையை பக்கத்தில் கொண்டு வந்து அவனை ஒரு சொழட்டு சொழட்டி அவரை தூக்கி போட்டுச்சாம். அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கே தெரியும். அந்த அடிபட்டு கிடந்த அந்த மிஸ்டர் ஜெகஜால கில்லாடியிடம் அந்த பிரண்ட் வந்து யானைக்கு கொஞ்சம் மெமரி பவர் ஜாஸ்தி நினைக்கிறேன் என்று காதில் சொன்னானாம். இந்த கதையில் அந்த யானை யாருன்னு கேட்டீங்கன்னா நம் வாக்காளர்கள். அந்த மிஸ்டர் ஜெகஜால கில்லாடி யாருன்னு கேட்டீங்கன்னா உங்க மைண்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அதுக்கு நிர்வாகம் பொறுப்பு இல்ல. அது யாரா வேணா இருந்துட்டு போகட்டும். ஆனா இங்க இருக்கிறது ஒத்த யானை இல்ல ரெட்டை யானைகள். ரெட்டை போர் யானைகள், என் சிங்கப் பெண்கள், உங்களை எல்லாம் யாரும் எதையும் சொல்லி ஏமாத்த முடியாது” என்று கர்ஜித்துப் பேசினார்.
Follow Us