கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள், தமிழ்நாட்டில் ஆறாத வடுவாக மாறியுள்ளது. இதில், தவெக தலைவர் விஜய்யைக் கடுமையாகக் கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. ஒருபுறம், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்க, மறுபுறம் அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடிய தவெக தலைமை, விசாரணைக்குத் தடை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அவசரத்திற்குப் பின்னணியில், கரூர் தவெக பிரச்சாரத்தில் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங் நடத்தப்பட்டதே காரணம் எனப் பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் இதுவரை, தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கரூரில் விஜய் பேசத் தொடங்கிய ஆரம்பத்திலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகக் கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ்கள் சென்றன. திமுக அரசு வேண்டுமென்றே கூட்டத்துக்குள் காலியான ஆம்புலன்ஸ்களை அனுப்பியதாகக் கருதிய தவெக தொண்டர்கள் சிலர், ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது தொடர்பாக, கரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கிய விவகாரத்தில், சேலத்தைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினரான மணிகண்டன், கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மேலும், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பறிமுதல் செய்த தனது காரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நிகழ்ந்து பத்து நாட்களுக்கு மேல் ஆன நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தவெக தலைவர் விஜய், உயிரிழந்த 41 குடும்பங்களை வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறி, விரைவில் அவர்களைச் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கரூர் கருப்பாயி கோயில் தெரு பகுதியில் உயிரிழந்த சிறுவன் கிருத்திக் யாதவின் குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசிய விஜய்யின் காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.