திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுகன்யா தம்பதிக்கு கடந்த 11ஆம் தேதி திருச்சி புத்தூர் அருகே உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யா அனுமதிக்கப்பட்ட அதே பிரிவில் சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர், சுகன்யாவுக்கு அறிமுகமாகியுள்ளார். தன் பெயர் மீனாட்சி என்று கூறி சுகன்யாவிடம் நன்றாக பேசி பழகி, அவருக்கு உதவியும் செய்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண், இன்று காலை குழந்தைக்கு தடுப்பூசி போட்டு வருவதாகக் கூறி குழந்தையை சுகன்யாவிடம் வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால், சுகன்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின், அந்த பெண்ணையும் குழந்தையும் காணவில்லை என்று சுகன்யா தன் பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார். அதன்படி, அவர்கள் அந்த பகுதியில் குழந்தையை நீண்ட நேரமாக தேடியுள்ளனர். எங்கு தேடியும் அந்த பெண்ணும் குழந்தையும் காணாததால் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த பெண் துறையூர் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார், துறையூர் அருகே சென்று சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர். பட்டப்பகலில் பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ‘மக்களுக்கான அரசு’ என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/arasuvj-2026-02-14-16-48-08.jpg)