தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் ஒரு நாளைக்கு 3 மாவட்டங்கள் என மொத்தமாக 10 வாரம் என சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகத் திட்டமிட்டது. கடந்த செப்டம்பர் 13ஆம் திருச்சியில் தன்னுடைய முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட விஜய், அங்கு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
ஒரு நாளைக்கு 3 மாவட்டங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விஜய், முதல் நாளில் திருச்சி மற்றும் பெரம்பலூரில் மட்டுமே மக்கள் சந்திப்பை நடத்தினார். பெரம்பலூரில் இரண்டு இடங்களில் மக்கள் காத்திருந்த நிலையில், ஒரு இடத்தில் மக்களை பார்த்து கையசைத்துவிட்டு பெரம்பலூர் வானொலி திடலுக்கு புறப்பட்டார். ஆனால் விஜய்யை பார்க்க அதிகளவு கூட்டம் கூடியதால் நள்ளிரவு 12 மணியளவில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரம்பலூர் வானொலி திடலில் காத்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு 3 மாவட்டங்கள் என்பது 2 மாவட்டங்களாக மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 2 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வரும் 27ஆம் தேதி நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்த விஜய்யின் பயணம் , தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தில், 18 சனிக்கிழமைகளிலும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.