Advertisment

வேலூரில் விஜய் பரப்புரை : த.வெ.க. தொண்டர்களால் தள்ளுமுள்ளு!

vlr-tvk-meet-tm

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தவெகவினர் பரபரப்பாக அரசியல் களத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய், வேலூரில் இன்று (23.02.2026) கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். இதற்காக, வேலூரில் உள்ள அகரம் சேரியில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வெயிலின் தாக்கத்தினால் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த முறை அது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக அரங்கில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 5000 பேர் அமரும் வகையில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதோடு, திடலுக்குள் செல்வதற்குத் தொண்டர்களுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்த அனுமதிச் சீட்டுகள் இல்லாதவர்கள் கூட்டத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் அந்த அனுமதிச் சீட்டுகளை நகல் எடுத்து போலியான அனுமதிச் சீட்டுடன் வந்துள்ளதாகவும், அவ்வாறு போலியான சீட்டுகளுடன் வந்தவர்களை காவல்துறையினர் திரும்ப அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கு, பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முறையான அனுமதிச் சீட்டு இல்லாமல் வருபவர்களைக் கூட்டத்திற்குள் அனுமதிக்காமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

Advertisment

ஆனாலும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிச் சீட்டு இல்லாதவர்களையும்  அனுமதிக்கக் கோரி கட்சியின் தொண்டர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அங்குள்ள தடுப்புகளைத் தாண்டி உள்ளே வர முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகப்படியான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எதுவாயினும், கூட்டத்தில் எந்தவித சிக்கலும் ஏற்படாதவாறு, பாதுகாக்கும் வகையில் காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் சாலை வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வரும் வழியில் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பளித்து வருகின்றனர். இந்த நிர்வாகிகள் கூட்டம் 12 மணிக்குத் தொடங்கி மூன்று மணி நேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

Vellore Tamilaga Vettri Kazhagam tvk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe