த.வெ.க.விற்கு விசில் சின்னம் கிடைத்த குஷியில் இருக்கும் விஜய், கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தை 25ஆம்தேதி கூட்டியிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், "த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ஷெராட் டானில் 25ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் பணிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இதனையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தவெக செயல் வீரர்கள் அனைவருக்கும் க்யூஆர் கோடு மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட் உள்ளவர்கள் மட்டுமே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் விஜய்யிடம், விசில் கொடுத்து ஊத வைப்பது எனவும், அவர் ஊதும் போது, செயல்வீரர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் விசில் ஊத வேண்டும். அந்த சத்தம் தமிழகம் முழுவதும் ஒரு அதிர்வலையை உருவாக்கும் என்றும் ஒரு திட்டத்தைச் சொல்லியிருக்கிறார்கள். 

Advertisment

இதனை விஜய் ஏற்கும் பட்சத்தில் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் போதே ஒவ்வொருவருக்கும் ஒரு விசில் கொடுக்கப்படுமாம். அதனை உடனே ஊதி விடக்கூடாது. கூட்டத்துக்கு விஜய் வந்ததும், அவர் மேடையில் இருந்தபடி, விசில் ஊதுவார். அப்போது அவருடன் இணைந்து அனைவரும் ஊத வேண்டும் என்று சொல்லப்படுமாம். இந்த திட்டத்தினை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு விஜய் ஓ.கே. சொன்னால், செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் விசில் சத்தம் காதைப் பிளக்கும் என தவெக தரப்பில் சொல்லப்படுகிறது.