Advertisment

“மாணவர்களின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.15,000” - விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதி!

vijaymani

Vijay announced election promise Rs. 15,000 per year for students’ families

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (08-03-26) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-26) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார்.

Advertisment

இந்த விழாவில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலனில் அவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே நம் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்று. இதை நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே அறிவித்தோம். அதன்படி அதற்கென தனித்துறை அதாவது தனி இலாக்கா ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. முதல் மாநில மாநாட்டில் அறிவிக்கப்பட்டது போலவே பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கென தனி இலாக்கா உருவாக்கப்படும். அந்த இலாக்கா, எனது நேரடி கட்டுப்பாட்டிலும்  கண்காணிப்பிலும் இருக்கும். சமரசமற்ற பெண்கள் பாதுகாப்பை நோக்கி  பயணிக்கும் நம் கனவு நனவாவது உறுதி என்பதை நமது தேர்தல் முதல் வாக்குறுதியாக சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

இரண்டாவது மதிப்புமிகு மகளிர் திட்டம். மக்கள் பணத்தை மக்களுக்கே திருப்பி தருவது எப்படி ஓசி என்று கேலிக்கு உள்ளாகும்?. எப்படி இலவசம் என்று ஏழனமாக பார்க்கப்படும்? இப்படி வரையறுக்க எந்த அரசியல் கட்சிக்கும், எந்த அரசியல்  தலைவருக்கும் உரிமை இல்லை என்று தமிழக வெற்றிக்கழகம் ஓங்கி உரைக்கிறது.  இந்தியாவில் நம்பர் ஒன்னாக இல்லாத மாநிலங்களில் கூட பெண்களுக்காக மாதமாதம் வழங்கப்படும் தொகை அதிகமாக உள்ளது. ஆனால் நம்பர் ஒன் மாநிலம் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசில் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் தொகையால் அவர்களின் மளிகை சாமான் வாங்குவது போன்ற முக்கிய செலவுகளில் ஒன்றாவது குறைந்தபட்சமாக பூர்த்தியாக வேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில் யோசித்ததால், நாம் அமைக்கப்போகும் மக்கள் அரசு இனி 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாத மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்பதை பெரு மகிழ்வுடன் அறிவிக்கிறோம். இதில் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு. இப்படி செய்வதால் கூடுதலான குடும்பங்கள் பயனடையும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை  நம் தாய்மார்கள் அனைவரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர் என்பது நமக்கு தெரியும்.  

அடுத்து அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம். நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமையாக மாறி நிற்பது சமையல் கேஸ் விலையும் ஒன்று. தேர்தல் நெருங்கும் போது மட்டும் கேஸ் விலை குறைக்கப்படும். தேர்தல் முடிந்ததும் மீண்டும் கேஸ் விலை உயர்த்தப்படும். அந்த விலை உயர்வு, நம் காதுகளில் புகை வரும் அளவிற்கும், கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கும் இருக்கும். தமிழகம் முழுவதும் இருக்கும் பெண்களின் மனதை அறிந்து நம் எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். நம்மை சீராட்டி வளர்த்த நம் தாய்மார்கள் வயிற்றில் பால்வார்க்கும் திட்டமாக இதை அறிவிப்பதில் தமிழக வெற்றி கழகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்கிறது. அடுத்து, அண்ணன் சீர்திட்டம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய மகிழ்வை தருவது அந்த குடும்பத்தில் நடக்கும் திருமண கொண்டாட்டம் தான். அதை எந்த வருத்தமும் இன்றி முழு மன நிறைவுடன் கொண்டாட வேண்டும். அதற்காகவே நம் தங்கைகளின் திருமணத்திற்காக 8 கிராம், அதாவது ஒரு பவுன் தங்கமும் தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.

அடுத்து, காமராஜர் கல்வி உறுதி திட்டம். கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரை கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏற்ற ஒரு இயக்கம் தான் நம் தமிழக வெற்றிக் கழகம். நமது கல்வி சார்ந்த கனவுகளில் ஒன்றாக கல்வி இடைநிற்றல் என்பதே இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள திட்டம்தான் காமராஜர் கல்வி உறுதி திட்டம். இடைநிற்றலுக்கான காரணங்களில் ஒன்றாக பொருளாதார குறைபாடும் இருக்கிறது. இதை உணர்ந்ததால் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை எந்த குழந்தையும் கல்வி இடைநிற்றலுக்கு ஆளாகவே கூடாது என்று எண்ணுகிறோம். அந்த எண்ணத்தின் அந்த எண்ணத்தின்படி நம் விருப்பத்தை நிறைவேற்ற இடைநிற்றலே இல்லாமல் செய்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் பொருளாதார உதவி தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார். 

women's day Election manifesto tvk vijay tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe