தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் த.வெ.கவும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு நடிகர் விஜய் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியதோடு, மக்கள் சந்திப்பையும் முற்றிலுமாகத் தவிர்த்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சேலத்திலிருந்து மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் அம்மாவட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய், பாலாறு மணல் கொள்ளையில் ஊழல் நடந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்

Advertisment

இது தொடர்பாக பேசிய அவர், “இந்தக் காஞ்சி மண்ணை வாழவைக்கிற ஜீவநதி பாலாறு… உயிர்நதி பாலாறு. இந்த மக்களோடு உயிரோடும் இரத்தத்தோடும் கலந்து ஓடுகிற நதி பாலாறு. அந்தப் பாலாறை இன்றைக்கு பெரியார் பெயரையும் அண்ணா பெயரையும் வெறும் பெயருக்காக மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்தானே? சுரண்டிவிட்டார்கள்… கொள்ளையடித்துவிட்டார்கள்… நாசம் செய்துவிட்டார்கள்… மோசம் செய்துவிட்டார்கள்… இன்னும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆக மொத்தம் அழித்துவிட்டார்கள்.

நான் இதை எதுவும் போகிற போக்கில் சும்மா அடித்துவிடவில்லை. ஆதாரத்தோடுதான் சொல்கிறேன். அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஆக மொத்தம் இதில் அவர்கள் அடித்த கொள்ளை எவ்வளவு தெரியுமா? ரொம்ப இல்லை… கொஞ்சம்தான்… வெறும் 4,730 கோடி ரூபாய்!

Advertisment

இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது. ஏனென்றால், இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கெனவே நீதிமன்றத்தில் இருக்கின்றன. அமலாக்கத் துறையிடம் இருக்கின்றன. அந்தத் துறையில் பணியாற்றிய சில நல்ல அதிகாரிகள் தாங்க முடியாமல் வெளியில் வந்து சொன்ன ஆதாரங்கள்தான் இவை. எனவே இது சம்பந்தமாக ஆதாரம் கேட்க அவர்களால் முடியாது… அவர்களுக்கே இது நன்றாகத் தெரியும்.

மணலை கொள்ளையடித்தால் நீர்நிலைகள் அழியும். ஏரி, குளம், கண்மாய் எல்லாம் அழியும். அவை அழிந்தால் விவசாயம் அழியும். விவசாயம் அழிந்தால் விவசாயிகள் அழிந்துவிடுவார்கள். ஆக மொத்தம் நாம் எல்லோரும் சேர்ந்து அழிந்து போய்விட வேண்டியதுதான்” என்றார்.

படம் - ஸ்டாலின்