கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்திற்கு வரவழைத்து நேற்று முன்தினம்  (27.10.2025) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். இத்தகைய சூழலில் தான்  தமிழக வெற்றிக்  கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கப் புதிதாக 28 பேர் கொண்ட குழுவைத் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியது. இதுகுறித்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

Advertisment

அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், துணைப் பொதுச்செயலாளர்  ராஜ் மோகன் உள்ளிட்ட 28  பேர் இடம்பெற்றிருந்தனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அவர் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அக்டோபர் 29ஆம் தேதி  காலை 10.00 மணிக்கு, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. 

Advertisment

கட்சித் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜய் இல்லாமல், பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று ( 29.10.2025) காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.