Video released by Tvk - School head transferred to new job Photograph: (tvk)
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் சார்பில் பள்ளியை சுத்தம் செய்ததாக வீடியோ வெளியிட்ட நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த சில இளைஞர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் சுஜாதா சியாமளா அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
உடனே இளைஞர்கள் பொக்லின் இயந்திரம் ஒன்றைக் கொண்டு வந்து பள்ளியை சுத்தம் செய்தனர். சுத்தம் செய்யப்படுவதை வீடியோவாக பதிவு செய்து கொண்ட அந்த இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளிக்கூடம் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டதாக நிர்வாகி பெயரை போட்டு சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் ஆசிரியர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி அப்பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அரசுப் பள்ளியில் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் செய்வதற்கு முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் நடந்ததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுஜாதாவை குளித்தலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.