ஹரியானா மாநிலத்தின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒய். பூரண் குமார் அக்டோபர் 7 அன்று சண்டிகரில் உள்ள தனது வீட்டில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், டி.ஜி.பி. சத்ருஜித் கபூர், ரோஹ்டக் எஸ்.பி. நரேந்திர பிஜர்னியா உள்பட 10 ஐ.பி.எஸ். மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறியிருந்தார். முறையற்ற பதவி உயர்வுகள், சாதி பாகுபாடு மற்றும் நிர்வாக துன்புறுத்தல் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் பூரண் குமாருக்கு நீண்டகால மோதல்கள் இருந்ததாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பேசு பொருளாக மாறியது.
பூரண் குமார் தற்கொலை செய்து கொண்டு 7 நாட்கள் ஆகியும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. டி.ஜி.பி. சத்ருஜித் கபூர் மற்றும் எஸ்.பி. நரேந்திர பிஜர்னியா கைது செய்யப்படும் வரை உடலை பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் அவரது மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நிலமையின் தீவிரத்தை உணர்ந்து ஹரியானா அரசு டி.ஜி.பி. சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவருக்கு பதிலாக டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரியான ஒபி சிங், ஹரியானாவின் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பொற்றுக்கொண்டார். அத்துடன் ரோஹ்டக் எஸ்.பி. நரேந்திர பிஜர்னியா இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பூரண்குமாரின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே, பூரண் குமாரின் ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஹரியானா சைபர் பிரிவின் உதவி எஸ்.ஐ. சந்தீப் குமார், அக்டோபர் 14, அன்று, தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தற்கொலைக்கு முன் சந்தீப் குமார், ஒரு வீடியோவையும், மூன்று பக்க கடிதத்தையும் எழுதி வைத்துள்ளர். அவற்றை கைப்பற்றிய காவல்துறை, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தற்கொலைக்கு முன் சந்தீப் லாதர் எழுதியுள்ள கடிதத்தில், பூரண் குமாரை ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டி, அவரது ஊழல் வெளிப்படும் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். பூரண் குமார், சாதி பாகுபாடு குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி அமைப்பைத் திசைதிருப்ப முயன்றதாகவும், ஊழல் குற்றச்சாட்டு வெளியான பிறகே அவர் பணி மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பூரண் குமாரின் உதவியாளர் சுஷில், மது வியாபாரி பிரவீன் பன்சாலிடம் 2.5 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்று கைது செய்யப்பட்டதாகவும், இந்த விவகாரம் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில் பூரண் குமார் சாதி பிரச்சினையை முன்னிறுத்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் சந்தீப் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், பூரண் குமார் ரோஹ்டக்கில் நியமிக்கப்பட்ட பிறகு நேர்மையான அதிகாரிகளை ஊழல்வாதிகளாக மாற்றத் தொடங்கினார். மனுதாரர்களிடம் பணம் கேட்டு மனரீதியாக துன்புறுத்தினார். மேலும், பெண் காவல் அதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு பிரதிபலனாக அவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டனர். பூரண் குமாரின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது சாதி பிரச்சினை அல்ல, உண்மை வெளிவர வேண்டும். பூரண் குமார் ஊழல்வாதி. இந்த உண்மைக்காக நான் உயிர் தியாகம் செய்கிறேன். நேர்மையுடன் நிற்பதில் பெருமைப்படுகிறேன். டி.ஜி.பி. சத்ருஜித் கபூர் மற்றும் எஸ்.பி. நரேந்திர பிஜர்னியா இருவரும் நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
பூரண் குமாரின் மரணம் தொடர்பாக சண்டிகர் ஐ.ஜி. தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தீப் லாதரின் தற்கொலை இவ்வழக்கில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களில் இரு காவல்துறை அதிகாரிகள் தங்களது துப்பாக்கிகளால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சக காவலர்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.