கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர், இஜிபுராவைச் சேர்ந்தவர் 26 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி 5ம் தேதி, ஒரு டேட்டிங் செயலியில் கணக்கைத் துவங்கி பயன்படுத்தி வந்துள்ளார். சிறிது நேரத்திலேயே, இஷானி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு பெண்ணிடம் இருந்து அவருக்கு நட்பு கோரிக்கை வந்துள்ளது. இவரும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், இருவரும் நட்பாகப் பேசத் தொடங்கினர். அதன் பிறகு, படிப்படியாக தங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர், தொடர்ந்து, தனிப்பட்ட முறையில் உரையாடுவதற்காகத் தங்கள் மொபைல் எண்களைப் பரிமாறிக்கொண்டனர். இருவரும் மொபைல் மூலமாகவே மிக நெருக்கமாகப் பேசிப் பழகியுள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண் ஒரு வீடியோ அழைப்பில் வந்துள்ளார். அந்த வீடியோ அழைப்பில் அந்த பெண் நிர்வாணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட இளைஞரையும் தனது ஆடைகளைக் கழற்றுமாறு அந்த பெண் கேட்டுள்ளார். அந்த இளைஞரும் அந்த பெண்ணின் விருப்பத்திற்கு இணங்கியுள்ளார். இந்த வீடியோ அழைப்பின் போது, அந்த அந்தரங்க வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த இளைஞரின் வாட்ஸ்அப்பிற்கு, அந்தத் தனிப்பட்ட வீடியோ காட்சிகளை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணத்தைக் கொடுக்காவிட்டால் அந்த வீடியோக்களை அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் பகிர்வதாக மிரட்டியுள்ளனர். அந்த இளைஞரும் தனக்கு அவமானம் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில், ஆரம்பத்தில் ரூ. 60,000 மற்றும் பின்னர் ரூ. 93,000 என மிரட்டியவர்கள் வழங்கிய வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார். மேலும், அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தியதால், அந்த இளைஞர் காவல்துறையை அணுகி புகார் அளித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், அந்த டேட்டிங் செயலியின் மூலமாக அவருடன் பேசிப்பழகிய பெண்ணின் பெயரில் இருந்த கணக்கு போலியானது என்றும், போலியான கணக்கை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வீடியோ அழைப்பின் போது காணப்பட்ட நிர்வாணப் பெண் ஒரு உண்மையான நபர் அல்ல, மாறாக செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இது சம்பந்தமாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இணையதளத்தின் மூலமாக இளைஞரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/618-2026-01-13-09-33-24.jpg)