கடலூர் மாவட்டம், பல்லவராய நத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், 3 நாட்கள் திருவிழா நடத்தவும் தலித் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சாமி ஊர்வலம் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவதில்லை.
இது குறித்து கடந்த 2010ஆம் வருடம் இந்து சமய அறநிலைய அதிகாரிகள் கீழ் கண்டவாறு காரணம் தெரிவித்தனர். அதாவது;“தெய்வத்தை வழிபட தற்போது ஹரிஜனங்களால் இயலுமாதலால் தெய்வத்தை ஊர்வலமாக கொண்டு செல்வது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதாகாது”. இவ்வுத்தரவு சாதிய மனோபாவத்தின் வெளிப்பாடே. எனவே, அதே கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசீலன் மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்து மேற்கண்ட உத்தரவை 2022ஆம் வருடம் ரத்து செய்தது. எனவே 2010 முதல் 2025 வரை திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், மீண்டும் திருவிழா நடத்த அரசு தரப்பில் முயற்சி நடைபெற்று அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால், தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சாமி ஊர்வலம் வராது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மீண்டும் ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று (12.09.2025) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கும், சாமி ஊர்வலம் செல்ல வேண்டும் அதை மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் கண்காணிப்பாளரும் உறுதி செய்ய வேண்டும் என கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாதிய மனோபாவத்துடன் செயல்படும் அதிகாரிகளுக்கு இது ஒரு தக்க பாடம் ஆகும்.