தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் கடந்த மாதம் ஜூலை 27 ஆம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. தன் சகோதரியை காதலித்து வந்த பட்டியலின இளைஞரான கவினை கொலை செய்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தைக்கும் தொடர்பு இருக்கும், எனவே அவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவினின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனனை கஸ்டடியில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்த நிலையில், ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினர் இன்று (25-08-25) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அதனை தொடர்ந்து கவினின் தந்தையோடு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திருமாவளவன் பேசியதாவது, “கவினின் குடும்பத்தினர், முதல்வர் சந்தித்து தம்முடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், அந்த கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது எனவே யாரும் தப்பித்துவிடாமல் இருக்கக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திருக்கின்றனர். அதோடு தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். முதல்வர் கனிவுடன் இந்த கோரிக்கைகளை செவிமடுத்தார். நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று பெரிதும் நம்புகிறோம்.
இந்த சந்திப்பின் போது நிவாரணம் எதுவும் கேட்கவில்லை. இந்த இரண்டு மூன்று கோரிக்கைகளை தான் கவின் குடும்பத்தினர் சார்பில் வைக்கப்பட்டது. குறிப்பாக கவினின் தாய் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கு சொந்த பகுதியிலேயே அந்த கிராமத்திலேயே பாதுகாப்பற்ற ஒரு சூழல் இருக்கிறது என்கிற கவலையை கவினின் தந்தை வெளிப்படுத்திருக்கிறார். அவற்றை எல்லாம் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக இருக்கிறோம், வலியுறுத்தி இருக்கிறோம். மாநில அரசுக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது என்பதை ஏற்கெனவே நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலேசில கோரிக்கை மனுக்களை வழங்கி இருக்கிறோம்” என்று கூறினார்.