இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/09/2025) தொடங்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக பிரதமர் மோடி வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பல்வேறு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 758 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று நடைபெறும் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்கு பதிவு முடிந்து இன்று மாலையே யார் அடுத்த துணைக் குடியரசு தலைவர் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக ஒரிசாவின் பிஜு ஜனதாதளம் மற்றும் தெலுங்கானாவின் பிஆர்எஸ் கட்சிகள் தெரிவித்து, எங்களுடைய உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அறிவித்துள்ளனர்.