குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாக இந்திய துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09.09.2025) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.  இதற்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக பிரதமர் மோடி வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Advertisment

இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 758 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குப்பதிவைத் தொடர்ந்து இன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்கு 358 வாக்குகள் தேவைப்படும் நிலையில், சி.பி.ராதா கிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Advertisment

இது தொடர்பாக மாநிலங்களவை பொதுச் செயலாளர் பிசி மோடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் 452 முதல் விருப்ப வாக்குகளைப் பெற்றார். எனவே அவர் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி 300 முதல் விருப்ப வாக்குகளைப் பெற்றார்” எனத் தெரிவித்தார். முன்னதாக துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.