குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் முதன் முறையாக இன்று (28.10.2025) 3 நாள் பயணமாகத் தமிழகம் வருகை புரிந்துள்ளார். அரசு முறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு நெசல்ஸ் நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (28.10.2025) கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Advertisment

அப்போது விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.  இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை தொடக்கம் வரையில் இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் நேரடியாகச் சந்தித்து நன்றித் தெரிவித்துக் கொண்டார். அப்போது அவருக்கு பாஜக  கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கொடிசியா வளாகத்தில் கோவை மக்கள் மன்றம் சார்பாக நடைபெற உள்ள நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

Advertisment

அதன் பின்னர் மதியம் கோவை மாநகராட்சி அரங்கில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அவர் மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து பேரூரில் உள்ள சாந்தலிங்க அடிகளார் அரங்கில் நூற்றாண்டு விழாவிலும் அவர் பங்கேற்க உள்ளார். அதன் பின்னர் திருப்பூருக்குச் செல்லும் அவர் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையை ஒட்டி கோவை மாவட்டத்தில் அவர் பயணிக்கக்கூடிய பல்வேறு பகுதிகளும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் ட்ரோன்கள் இயக்கக் கூடாது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் வரும் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அந்த வகையில் அதன் பிறகு மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார். 

Advertisment