தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் தற்பொழுது தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், ''இன்றைய தேதி வரைக்குமான இயல்பு நிலை 7 சென்டிமீட்டர்.  16 நாட்களுக்கான மழை அளவு இன்று வரைக்கும் இயல்பிலிருந்து 37 சதவீதம் அதிகமாக பதிவாகி இருக்கிறது.  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு  வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 18ம் தேதி வாக்கில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளத்திற்கு கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளது. வருகிற 24-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.

Advertisment

ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கையை பொறுத்தவரை 16 லிருந்து 18 அக்டோபர் வரை அடுத்த மூன்று தினங்கள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். 19 ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு தினங்கள் அக்டோபர் 16 மற்றும் 17 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்று அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை 17ஆம் தேதி தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

Advertisment