தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பொழிந்து வரும் நிலையில் தென்காசியின் பிரபல சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பரவலாக பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு தடுப்பு வரை வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஏற்கனவே அருவியில் குளிக்க மூன்று நாட்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையானது இன்றும் தொடர்கிறது. அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை போலீசார் நூறடிக்கு முன்னேயே தடுத்து நிறுத்தி அருவியில் குளிக்கக் கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை காண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக். 20ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.