உடல் எடையை குறைக்க வேண்டும் என பெண் ஒருவர் வெங்கார கல்லை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் செல்லூர் அடுத்துள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (19) மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமனுடன் காணப்பட்ட கலையரசி தன்னுடைய எடையை குறைக்க வேண்டும் எண்ணி வந்துள்ளார்.

Advertisment

இதற்காக மருத்துவரை அணுகி எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் யூடியூப் வீடியோக்கள் மூலமாக 'உடல் எடையை குறைப்பது எப்படி?' என தேடி வந்துள்ளார். அவர் பார்த்த ஒரு வீடியோவில் வெங்காரம் சாப்பிடுவதால் உடல் எடையை   குறைக்கலாம் என தகவல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த நாட்டு மருந்துக் கடையில் வெங்கார கற்களை வாங்கி உள்ளார்.

வெங்கார கல்லானது உலோகங்களை சுத்திகரிப்பு செய்யவும், குங்குமம் உருவாக்கவும் பயன்படும் ஒரு வேதிப்பொருளாகும். அக்கல்லை கலையரசி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் உடனடியாக கலையரசியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இரவில் கலையரசிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கலையரசி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு மருந்துக் கடையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. 

Advertisment