Velmurugan speaking in the assembly
இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி பட்ஜெட் குறித்தான விவாதமும், வேளாண் இடைக்கால பட்ஜெட் குறித்தான விவாதமும் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது திமுக - அதிமுக இடையே காரசார வாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், 16வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று (20-02-26) நடைபெற்றது. இதை அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்து சட்டப்பேரவைக்கு வராத நிலையில், மற்ற தமிழக எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உரையாடினர்.
அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் பேசியதாவது, “ஒரு இயக்கம் எப்படி மாநாடு நடத்த வேண்டும்? எப்படி கருத்தரங்கம் நடத்த வேண்டும்? எப்படி கூட்டம் நடத்த வேண்டும்? எப்படி ஒரு அரசியல் இயக்கம் தமிழ்நாட்டில் நடைபோட வேண்டும் என்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு செய்யப்பட்ட நேர்த்தியாக ஒரு இயக்கத்தை கட்டி அமைத்த வரலாற்று பெருமை கொண்ட இயக்கம் திமுக தான். அதனால், சிபிஐயும் சந்திக்க முடிகிறது, ஐடி ரெய்டையும் சந்திக்க முடிகிறது, அமலாக்கத்துறையும் சந்திக்க முடிகிறது. பாசிசம் எந்த விதத்தில் வந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு ஆட்சி, அதிகாரம், பதவி எங்களுக்கு முக்கியமில்லை, ஏற்றுக்கொண்ட கொள்கையிலும் லட்சியத்திலும் உறுதியாக இருப்போம் என்று திமுக இமயம் போல் இருக்கிறது.
திராவிட இயக்கத்தினுடைய வழித்தோன்றல்கள், முதல்முறை அமைச்சர்களாக இருந்தாலும் கூட இந்த திராவிட இயக்கத்துக்கு உரிய பாணியில் பதில் சொல்கிறார்கள். எங்கும் பிசிறு இல்லை, தட்டு தடுமாறல்கள் இல்லை. இது இந்தியாவில் வேறு எந்த கட்சியிலும் இருக்காது. அன்றைக்கு பார்த்த அதே ஒழுங்கு, அதே கட்டுப்பாடு இன்றைக்கு வரைக்கும் இருப்பதால் தான் திமுக என்ற கட்சியை எவனாலும் அசைத்து பார்க்க முடியவில்லை. எத்தனையோ பேர் வருகிறார்கள், திமுகவை வீழ்த்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி சொன்னவர்கள் எல்லாம் இன்றைக்கு இருக்கிற இடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கிறார்கள். உழைப்பு, அர்ப்பணிப்பு, அரவணைப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்களுடைய சின்னத்தில் என்னை நிற்க வைத்து நான் ஒரு எம்.எல்.ஏவாக இங்கே அமர்ந்திருக்கிறேன். இந்த ஐந்து ஆண்டு காலம் என் மனசாட்சிக்கு தெரியும். இந்த அமைச்சர்களை புகழவில்லை, இந்த அரசை பாராட்டவில்லை. எதிரணியில் ஒரு உறுப்பினர் எப்படி செயல்படுவாரோ அப்படி தான் நான் செயல்பட்டிருக்கிறேன்.
ஆனால், எந்த இடத்திலும் பேரவைத் தலைவர் அறையில் சந்திக்கிற போதோ, தங்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கின்ற போதோ எந்த இடத்தில் சிறு கடுகளவும் முகத்தை காட்டாமல் தாய் உள்ளத்தோடு என்னை கை பிடித்து மகிழ்ந்து தான் பேசியிருக்கிறார் முதல்வர். எதிரிகள் கூட உங்களை பாராட்டுகிற இடத்திற்கு நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். இந்த மண்ணில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் முதலமைச்சரின் திட்டமும் அமைச்சர்கள் நிர்வகிக்கப்படுகின்ற துறையின் மூலமாக எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைப்பதை கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் இந்த அரசு இயந்திரமும் முதலமைச்சரும் அமைச்சர்களும் துறை அதிகாரிகளும் உழைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த உழைப்பை போற்ற தெரியாத, இந்த உழைப்பை கொண்டாட தெரியாத, இந்த உழைப்பை அங்கீகரிக்க தெரியாத ஒரு கூட்டம் இந்த நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்கும், மக்களுக்கும், மொழிக்கும், இனத்திற்கும், சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் போராடிய எண்ணற்ற தலைவர்கள் ஈகம் செய்த வரலாற்று பெருமை கொண்ட இந்த இனம், சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு மிகப்பெரிய பங்காற்றிய தமிழர் நிலம்.
அப்படிப்பட்ட தலைவர்களை எல்லாம் கொண்ட இந்த தமிழர் நிலத்தில் இன்றைக்கு வீட்டுக்கு ஒருவர் அந்த நடிகருக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்று பல பத்திரிக்கை ஊடக நண்பர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர், அந்த நடிகருக்கு தன் தாயும் தந்தையும் இன்சைன் செய்து வாக்களிக்க தயாராக இருக்கிறார் என்று ஒரு போலி பிம்பம் கட்டி உருவாக்கப்படுகிறது. முதலமைச்சர் அவர்களே, துணை முதலமைச்சர் அவர்களே, மூத்த அமைச்சர் பெருமக்களே அந்த போலி பிம்பங்கள் உடைக்கப்பட வேண்டும். தமிழ் இனத்தின் பெருமை தெரியாமல் அருமை தெரியாமல் திரைத்துறையில் நடித்தார்கள், வசனம் பேசினார்கள் பாடலுக்கு உதட்டசைத்தார்கள், நல்லா டான்ஸ் ஆடினார்கள் அதனால் அவரை பிடிக்கும் அவருக்கு நாங்கள் வாக்களிப்போம் என்று சொல்கிற ஒரு ஈழ தமிழ் சமூகம் உருவாகி இருக்கிறது” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us