சேலம் ஜவுளிப் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் டி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சேலம் யான் கலரிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளும் அமைக்கப்பட இருப்பதாக வெளியாகும் தகவல், மக்கள் நலனுக்கு எதிரானது. இது அடுத்த சந்ததியினரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கொடிய திட்டம் என்பதை அரசு உணர வேண்டும்.

Advertisment

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கும், புளியம்பட்டி, குள்ளக் கவுண்டனூர், பல் பாக்கி ஜங்ஷன், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில் பாடி, செங்காடு, காமி நாயக்கன்பட்டி, ரெட்டியூர், ஜாகீர் ரெட்டிபட்டி, ஜாகீர் அம்மாபாளையம் உள்ளிட்ட சுமார் 12-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் இடத்தில், இத்திட்டம் கொண்டுவரப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

இங்கு சாயப்பட்டறைகள் இயங்கினால், அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த சுத்திகரிக்கப்படாதச் சாயக்கழிவுகளால், இப்பகுதியின் நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், மண், மற்றும் காற்று ஆகியவைக் கடுமையாக மாசடைந்து, நீர் ஆதாரம் முழுமையாக அழிந்து போகும் அபாயம் உள்ளது. இது சேலம் மாநகர மக்களின் குடிநீர் உரிமையைப் பறிப்பதோடு, விவசாயத்தையும் முற்றிலுமாக நாசமாக்கும் செயலாகும்.

இத்திட்டம் அமையவுள்ள பகுதியைச் சுற்றிலும், சுமார் 4000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களும், விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கானக் குடும்பங்களும் உள்ளன. இந்தச் சாய ஆலைகளின் மாசுபாட்டால், சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில் நிலம், நீர் மற்றும் காற்று மாசடைந்து, விவசாய நிலங்கள் பயனற்றுப் போகும். இதன் விளைவாக, பல்லாயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்கள் வேறு வழியின்றி இடம்பெயர வேண்டிய அவலநிலை உருவாகும். இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வகைப்பாட்டின்படி, சாயப்பட்டறை தொழில் என்பது ‘ரெட் கேட்டகிரி’ எனப்படும் அதிக அபாயகரமான மாசுபடுத்தும் தொழிலாகும். அதிக அளவு மாசுபட்டக் கழிவுநீர், நச்சு இரசாயனங்கள் மற்றும் காற்று மாசுபாட்டை இவை உருவாக்குகின்றன. உலகளவில் தண்ணீர் மாசடைவதற்கு 20% காரணமான இந்தத் தொழிலை, மக்கள் அடர்த்தியாக வாழும் மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வருவது, எந்த வகையிலும் நியாயமற்றது.

Advertisment

இவ்வளவு பெரிய அபாயகரமான திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், அதனால் பாதிக்கப்படவுள்ள ஜாகீர் ரெட்டிபட்டி, வெள்ளாளப்பட்டி, மூங்கில் பாடி, செங்காடு போன்ற, சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களிலும் முறையாகக் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஜாகீர் அம்மாபாளையம் கிராமத்தில் மட்டும் ஏதோ ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்வது ஜனநாயகப் படுகொலையாகும்; இது மக்களின் நலனை புறக்கணிக்கும் செயலாகும். அருகில் உள்ள பெருந்துறை சிப்காட் பகுதியில் சாயப்பட்டறைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் சாயக்கழிவு மேலாண்மையில் ஏற்பட்ட அலட்சியத்தால், சுற்றியுள்ள மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்பட்டிருப்பது கசப்பான உண்மை. 

இதேபோன்றதொரு சூழலை, சேலம் மக்களுக்கும் அரசு உருவாக்கித் தரலாமா? நச்சுக்கழிவுகளை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பூமிக்குள் செலுத்தும் அராஜகம் இங்கும் தொடருமானால், மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? எனவே, தமிழக அரசு உடனடியாக மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மக்கள் குடியிருப்புகள் நிறைந்த, குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியில் அமையவுள்ள இந்த ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறைகள் திட்டத்தை, முழுமையாக கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்