Velmurugan condemns Reservation for Muslims in Maharashtra revoked
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய இஸ்லாமிய சமூகப் பிரிவுகளுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பின் சமூகநீதி நோக்கத்தையும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படைகளையும் பாதிக்கும் முடிவாகும். மாநிலங்கள் தங்களது சமூக அமைப்பு மற்றும் வரலாற்றுப் பின்னடைவை கருத்தில் கொண்டு நலன்சார்ந்த கொள்கைகளை உருவாக்கும் அதிகாரமே கூட்டாட்சியின் அடித்தளம். அந்த அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த முடிவு உள்ளது.
இடஒதுக்கீடு என்பது மத அடிப்படையிலான சலுகை அல்ல, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய சமூகங்களுக்கு சம வாய்ப்பை வழங்கும் அரசியலமைப்பு நடைமுறை. அதை ரத்து செய்வது கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இத்தகைய முன்னுதாரணம் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டால் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு ஒதுக்கீடுகள் குறையும் அபாயம் உள்ளது.
எனவே, மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட இடஒதுக்கீடு ரத்து நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். சமூகப் பின்னடைவு அடிப்படையிலான அனைத்து பாதுகாப்பு வாய்ப்புகளையும் உறுதிப்படுத்த ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us