Advertisment

“மருத்துவ என்.ஆர்.ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு” - வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

velmurugann

Velmurugan alleged Major irregularities in medical NRI quota

மருத்துவ என்.ஆர்.ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் டி. வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertisment

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் டி. வேல்முருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவம், சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு என்ற பெயரில் நடைபெற்று வரும் முறைகேடுகள், இன்று நாட்டின் கல்வி அமைப்பையே சீரழிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. முதுநிலைத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றும், பொதுப் போட்டியிலும் சமூகநீதி இடஒதுக்கீட்டிலும் இடம் பெற முடியாத சிலர், தங்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) எனக் காட்டி, அதிகக் கட்டணம் செலுத்தும் பின்வழியைப் பயன்படுத்தி மருத்துவப் படிப்பில் தவறான முறையில் நுழைந்துள்ள செய்திகள், சமூக நீதியை நம்பும் கோடானுகோடி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

Advertisment

இது தற்செயலான தவறு அல்ல. இது அமைப்பு சார்ந்த மோசடி. இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகங்களுக்கு வழங்கப்பட்ட நியாயமான உரிமை. அந்த உரிமையை நேரடியாக எதிர்க்கத் துணியாதவர்கள், என்.ஆர்.ஐ கோட்டா (NRI quota) என்ற பெயரில் ஒரு மறைமுக வழியை உருவாக்கி, பணத்தின் மூலம் கல்வி உரிமையை கைப்பற்றுகிறார்கள். பணம் உள்ளவர்களுக்கு இடம், உழைப்பும் திறமையும் உள்ளவர்களுக்கு மறுப்பு என்ற இந்த நிலை, சமத்துவம் அல்ல. இது சாதிய ஆதிக்கத்தின் புதிய வடிவம். சமூக ரீதியாக முன்னிலை பெற்ற சிலர், பொருளாதார ரீதியாக கோடிகள் செலுத்தும் திறன் கொண்டவர்கள், ஏழை என்ற பெயரில் தங்களை முன்னிறுத்திக் கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த நடைமுறை, வரலாற்றுச் சாதியப் பாகுபாட்டின் தொடர்ச்சியே ஆகும்.  இது சமூகநீதி இடஒதுக்கீட்டையும், அதன் அடிப்படையையும் அழிக்கும் திட்டமிட்ட செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நீட் தேர்வும், மருத்துவ கவுன்சில் கமிட்டியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு விதிமுறைகளும், குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் சார்ந்த ஆவணங்களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் போது, ஒன்றிய அரசுக்குத் தெரியாமல் இத்தகைய என்.ஐ.ஆர் மாற்றங்களும், சேர்க்கை முறைகேடுகளும் எப்படி நடந்திருக்க முடியும்? என்.ஐ.ஆர் சான்றுகளை யார் சரிபார்த்தார்கள்? குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கட்டணம் செலுத்தி மருத்துவ இடங்களைப் பெற்ற போது, ஒன்றிய அரசின் அமைப்புகள் ஏன் மௌனம் காத்தன? இது நிர்வாகத் தோல்வியா, அல்லது சமூகநீதியை தளர்த்தும் திட்டமிட்ட சதியா? என்ற கேள்விகள் எழுகின்றன. இது சமூக நீதிக்கு எதிரான செயல், ஒன்றிய அரசின் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடு. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான  ஒதுக்கீடு என்றப் பெயரில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து உயர்மட்ட, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைத்து சேர்க்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும். சமூக நீதியை சிதைக்கும் இந்தப் மறைமுக வழிகள் உடனடியாக மூடப்பட வேண்டும். இந்தச் சதிகளுக்கும், மோசடிகளுக்கு துணை போன, ஒன்றிய பாஜக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சமத்துவம் என்பது பிச்சை அல்ல. இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது உரிமை. அந்த உரிமையை பணத்தாலும், சாதி அதிகாரத்தாலும் பறிக்கும் எந்த முயற்சியும், சமத்துவ சமூக நீதி இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதே’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

nri quota velmurugan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe