கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமென்ட் குடோனில் இருந்து 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. பின்னர், தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்றது.
அதில், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இது தொடர்பாக, எம்பி கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீதும் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, வேலூர் ஜே.எம்.1 (நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்று) நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்காக, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த கதிர் ஆனந்த், தனது ஆதரவாளர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.