மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தொடர் பயணத்தில் வேளாங்கண்ணி பேராலயம் சென்று ஆரோக்கிய மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இபிஎஸ்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பேராலயத்தின் உள்ளே மெழுகுவர்த்தி ஏத்தி வைத்து வழிபாடு நடத்திய எடப்பாடி பழனிசாமி,, வழிநெடுகிலும் நின்ற மக்களையும் பக்தர்களையும் சந்தித்து உரையாற்றினார்.

இதையடுத்து நாகையை அடுத்த நம்பியார் நகர் மீன்பிடித் துறைமுகத்திற்கு வருகை தந்தவருக்கு மீனவர்கள் ஒன்று திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்து கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அந்த மீனவர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், ‘’அதிமுக ஆட்சியில் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் அரசின் பங்களிப்பாக 24 கோடியும், மக்களின் பங்களிப்பாக 12 கோடி என 36 கோடி ரூபாயில் சிறு துறைமுகம் வைக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் தற்போதைய முதல்வர் பயன்பாட்டிற்கு துறைமுகத்தை திறந்து வைத்துள்ளார். இங்கு பல்வேறு குறைபாடுகள் உள்ளது அதிமுக ஆட்சி அமைந்த உடன் இந்த சிறு துறைமுகத்தில் உள்ள பிரச்சனைகள் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு படகுகள் பாதுகாப்பாக வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

நம்பியார் நகர் பகுதியில் சாலை வசதி மோசமாக உள்ளதாக கூறி உள்ளீர்கள் அதுவும் சீர் செய்து தரப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி வரை உள்ள மீனவர்கள் தடுப்புச் சுவர், சிறு துறைமுகங்கள், மீன் இறங்குதளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். அதேபோல் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதுவும் அதிமுக ஆட்சி அமைந்ததும் உயர்த்தி வழங்கப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மானியத்தில் ஃபைபர் படகுகள் வழங்கப்பட்டன. அதேபோல் 6 ஆயிரம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டு 1300 வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பணிகள் முடிந்தும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறுகிறார்கள் மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்ற அதிமுக ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று நம்பிக்கை கொடுத்தார்.