ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி அருகேயுள்ள சவுண்டப்பூர் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). பிரேக்கர் மெஷின் ஆபரேட்டர் ஆவார். அதேபோல், பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (38). இவர் மணிகண்டனுக்கு உதவியாளராக இருந்துள்ளார். இவர்கள் 2 பேரும் இன்று காலை மொபட்டில் அத்தாணி - சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர். மொபட்டை மணிகண்டன ஓட்ட பின்னால் ரமேஷ் அமர்ந்திருந்தார். அத்தாணி ஓடை மேடு பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது, எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் மொபட் மீது பலமாக மோதியது.
இதில் மணிகண்டன், ரமேஷ் இருவரும் வேனின் சக்கரத்தில் உடல் நசுங்கி ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மொபட்டும் வாகனத்தில் சிக்கி கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பள்ளி வேன் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த விபத்தில் தனியார் பள்ளி வேன் டிரைவர் மற்றும் பள்ளி வேனில் இருந்து மாணவர்கள் எந்த வித காயமும் இன்றி உயிர்த் தப்பினர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் உள்ள பாலம் குறுகிய பாலம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக பல விபத்துகள் நடந்துள்ளன. பாலத்தை பெரிய பாலமாக போக்குவரத்துக்கு ஏதுவாக கட்டக்கோரி வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிதாக கட்டப்படாமல் உள்ளது. மேலும் அப்பகுதியில் விபத்தால் உயிரிழப்பு சம்பவம் நடக்காமல் இருக்க, விரைவில் அந்த பாலத்தை பெரிய பாலமாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் புனரமைத்து கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/06/a5118-2025-09-06-20-13-57.jpg)