VCK leader Thirumavalavan speaks at the inauguration of Vaiko's march
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமத்துவ நடைப்பயணம் என்ற பெயரில் இன்று (01-01-26) முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து மதுரை வரை மேற்கொள்ளும் இந்த நடைப்பயணம், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று காலை துவங்க இருக்கிறது.
இந்த நடைபயணத்தை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த துவக்க விழாவை காங்கிரஸ் புறக்கணித்திருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் கே.என்.நேரு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய திருமாவளவன், “அண்ணன் வைகோவை 80களின் தொடக்கத்திலேயே மாணவன் பருவத்தில் கண்டு வியந்தவன். அவர் எங்கே உரையாற்றினாலும், அங்கே சென்று உரையை கேட்கும் ஆர்வம் கொண்டவன் நான். அன்றைக்கு அவரிடம் கண்ட அதே வீரியம், வேகம் பல பத்தாண்டுகளை கடந்த நிலையிலும் இன்றும் நீடிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுக்கொண்ட கொள்கையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் விதைத்த சமத்துவ கொள்கையில் இன்றும் உறுதிப்பாட்டோடு விளங்குகிறார். அவருடைய கொள்கை உறுதிப்பாட்டின் சான்றாக இந்த நடைப்பயணம் அமைந்திருக்கிறது. சமத்துவத்திற்காக போராடும் அனைவரும் அவருடன் இணைந்து நடக்க வேண்டும்.
பெரியார் இயக்கம் கண்டது சமத்துவத்திற்காக தான், பேரறிஞர் அண்ணா அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்ததும் இந்த சமத்துவத்திற்காக தான். முத்தமிழர் அறிஞர் கலைஞர் அரை நூற்றாண்டு காலம் இந்த மண்ணில் அரசியல் செய்ததும் சமத்துவத்திற்காக தான். அவருடைய கருத்தியல் வாரிசாக இன்றைக்கு களத்தில் நிற்கிற திராவிட மாடல் என்கிற சமத்துவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிற முதல்வரும் இங்கு போராடிக் கொண்டிருப்பது சமத்துவதற்காக தான். நம்முடைய இறுதி இலக்கும் சமத்துவத்திற்காக தான். நம்முடைய கூட்டணி சமத்துவத்திற்கான கூட்டணி. ஆனால் நம்முடைய சமத்துவத்திற்கு எதிராக களத்தில் நிற்பவர்கள் சனாதன சக்திகள். பாகுபாடு நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு நீடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் சனாதன சக்திகள், இன்னொரு புறம் ஜனநாயக சக்திகள்.
ஜனநாயக சக்திகள் இன்றைக்கு முதல்வர் தலைமையில் ஒருங்கிணைந்து நிற்கிறோம். இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு கூட்டணி அரசியலை முதல்வர் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமத்துவம் தான் இந்தியா முழுவதும் நாம் பேசுகிற அரசியல். அந்த அரசியலுக்கு தலைமை வகிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற ஒரு தலைவராக முதல்வர் இருக்கிறார். சனாதனத்திற்கும் சமத்துவத்திற்கும் இடையில் நடக்கும் யுத்தம் தான் வருகிற ஏப்ரல், மே மாதம் நாம் சந்திக்கப்போகிற யுத்தம். இது வழக்கமான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் சனாதன சக்திகள் ஒருபுறம், தமிழ் மண்ணை அப்படி ஆக்கிரமிக்க ஒருபோதும் விடமாட்டோம் என பெரியாரின் பிள்ளைகள், அண்ணாவின் தம்பிகள், அம்பேத்கரின் வாரிசுகள் மறுபுறம்.
வெளிப்படையாக சனாதன சக்திகள் ஒருபுறம் நிற்கிறார்கள் என்றால், அவர்களுக்கு துணையாக திராவிடத்தை பேசக்கூடியவர்களாகவும் தமிழ் தேசியத்தை பேசக்கூடியவர்களாகவும் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு திரிபுவாத அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நம் முன்னால் இருக்கிறது. இன்றைக்கு தமிழ் என்று நாம் பேசுகிறோம் என்றால் அது திராவிடத்தால் உயிர்ப்போடு இருக்கிறது திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது அல்ல, தமிழுக்கு எதிரானது அல்ல. இந்தி திணிப்பை தடுத்தது திராவிடம். இந்தி திணிப்பை திராவிடம் தடுத்ததால் தான் இன்றைக்கு தமிழ் உயிர்ப்போடு இருக்கிறது. திராவிடம் என்பது சமூக நீதி, சமத்துவம்” என்று பேசினார்.
Follow Us