உச்சநீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விசிக வழக்கறிஞர் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள விசிக தலைவர் திருமாவளவன் வந்திருந்தார். போராட்டம் முடிந்து உயர்நீதிமன்ற வளாகம் அருகே உள்ள ஆவின் பாலகம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது திருமாவளவன் பயணித்த கார் மோதியதாக வாகனத்தை நிறுத்திய ஒரு நபர் காரில் இருந்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கு இருந்த விசிக தொண்டர்கள் அந்த நபரைக் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் அந்த இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டனர். போலீசார் முன்னிலையிலேயே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் வழக்கறிஞரான தாக்குதலுக்கு உள்ளான ரஜீவகாந்தியை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் விசிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் விசிகவும், பாஜகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பார்கவுன்சில் நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இருதரப்பு மீதும் எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது? சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என கேள்விகளை எழுப்பிய நீதிபதி சதீஸ்குமார், சம்பவத்தை கட்டுப்படுத்தாமல் பிரச்சனையை தூண்டும் விதத்தில் திருமாவளவன் செயல்பட்டாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.
சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி இரண்டு வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.